வியாழன், 26 மே, 2016

காபி மற்றும் தேநீர்

  காபி மற்றும் தேநீர்

முன்னுரை

     காலை எழுந்ததும் மற்றும் மாலை நேரத்திலும் நம்மில் பலருக்கு காபி அல்லது டீ குடித்தால் தான்  அடுத்த வேலையை செய்ய முடியும்.  அதை குடிக்க சற்று தாமதம் ஆனாலும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.
காரணம்


    காபி அல்லது டீ மனிதனின் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்தால்  நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபி நம் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. அதனால் நாம் சோர்வாக உணரும் போது காபி அல்லது டீயை குடிக்கிறோம். காபியில் காபிஃன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்  தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
காபி அல்லது டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

     
   தினமும் இரண்டு கப் காபி குடித்தால் 14% பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
   
       பார்கின்சன் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய் வராமல் தடுக்கிறது.
     
   காபியில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் பாதிப்படைந்த செல்களை புதிப்பித்து கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
   மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காபிஃன் குறைப்பதால் மன அழுத்தம் குறையும். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு டீ குடிப்பதிலும் இருக்கிறது.
   தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால் அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளையும் குறைக்குமாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

   
    காபி அல்லது டீயை அளவாக குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ குடித்தாலோ அல்லது காபி குடித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் அமிர்தமே நஞ்சாவது போல் இதனாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.
  காபி அதிகமாக குடித்தால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து இரத்தசோகை ஏற்படலாம்.
  காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதய வால்வுகளை விறைப்படையச் செய்து பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.
  சிலர் தலைவலியாக இருந்தால் காபி அல்லது டீயை குடிப்பர். தலைவலிக்கு அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
  
  சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். குறித்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கத் தவறினால் பதற்றம் உண்டாகும். மேலும் எலும்பின் உறுதியை பாதிக்கும். பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் காபி அல்லது டீயை அதிக சூடாக குடிப்பதால் பற்கள் பலம் இழக்கிறது.
   காபி அல்லது டீயுடன் நாம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவிலேயே நமக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைத்து விடும். நாம் காபியில் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
  காபி அல்லது டீயை அதிகமாக குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதை குடிக்கத் தவறினால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடுவது போல் இருக்கும்.
முடிவுரை
எதையும் அளவாக சாப்பிட்டால் நமக்கு நன்மை தரும். நன்மைதானே என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு விசமாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 22 மே, 2016

கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்

          கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்


கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள்
கண்தானம் செய்ய விரும்புவோர் தமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு  கண்தானம் செய்வது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தாம் இறந்தவுடன் கண்களை எடுத்துக் கொள்ளலாம் என முன்கூட்டியே கண் மருத்துவமனையில் பெயரை பதிவு செய்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் பேப்பரை எல்லோரும் அறிந்த இடத்தில் வைக்க வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
கண்தானம் செய்வதில் செய்பவர்களைவிட சுற்றி இருப்பவர்களின் பங்கு அதிகம். கண்தானம் செய்பவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும்.
கண்தானம் செய்பவர் இறந்ததும் உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா எனப்படும் கருவிழிக்குள் ஒளிகற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.
கண்வங்கி
இறந்தவர்களின் கண்களைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்கும் காப்பகத்திற்கு கண்வங்கி என்று பெயர். நாம் அவர்களுக்கு கண்தானம் செய்பவர் இறந்த செய்தியை தெரிவிக்கும் போது கண் சேமிப்புக்கென உள்ள மருத்துவ அதிகாரிகள் உடன் வந்து இறந்தவர் கண்களை முறைப்படி எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பர். அதன் மூலம்  பார்வையற்ற இருவர்க்கு பார்வை கிடைக்கும்.
கண்தானம் செய்தவர் இறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்களை இறந்தவர்களின் உடலிலிருந்து அகற்றிவிடுவர். அப்போது தான் அதை பிறருக்கு பொருத்த முடியும்.
கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்று கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான் கண்விழிகளை பார்வையற்றவர்களுக்கு பொருத்துவர்.
முதலில் இறந்தவரிடம் இருந்து  இரத்தம் சேகரிக்கப்பட்டு உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு மற்றவர்க்கு பொருத்தப்படும்.
யார் கண்தானம் செய்யலாம்
நீரிழிவுநோய், இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால் தொற்றுநோய், மஞ்சள்காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்றவற்றால் இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.

திங்கள், 16 மே, 2016

கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!

கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!
முன்னுரை

தானங்களில் சிறந்தது கண்தானம் என்று கூறுவர். ஏனென்றால் நாம் இவ்வுலகை பார்க்க நமக்கு உதவியாக இருப்பவது கண்தான். எந்த உறுப்பு இன்றியும் நம்மால் வாழ முடியும். ஆனால்கண்ணில்லாமல் வாழ்வது போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. ஆனால் இந்த கொடுமையை உலகில் 4 கோடி மக்கள் அனுபவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் நம்மால் மீண்டும் இவ்வுலகில் வாழ முடியும்.  நாம் இறந்த பின்பு நம் கருவிழியை பிறருக்குப் பொருத்துவதன் மூலம் நம்மால் இந்த அழகிய உலகை நாம் இறந்த பின்னும் காண முடியும். கண் தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி இனி பார்ப்போம்.
கண்தானம் என்பது

கண்தானம் என்றாலே எல்லோரும் பயப்படுவர். கண்ணை அப்படியே எடுத்து பிறருக்கு பொருத்துவது என்று. அது தவறான புரிதல் ஆகும். கண்தானம் என்றால் நம் கண்ணையே எடுத்து பிறருக்கு பொருத்துவது அல்ல. கருவிழியை மட்டும் தனியாக எடுத்து பார்வையற்றவர்க்கு பொருத்துவது ஆகும். இது எல்லோருக்கும் பொருந்தாது. கருவிழியில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே கண்தானத்தால் சரிசெய்ய முடியும். கருவிழி ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கும் போது ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் செல்ல முடியாமல் கண் இருட்டாகிறது.  இதை கண்தானத்தின் மூலம் சரிசெய்ய முடியும்.
பார்வையற்றவர்கள்

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேலானோர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை பல கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனையோ பேர் பிறக்கின்றனர், எத்தனையோ பேர் இறக்கின்றனர். இறப்பவர்களின் கண்கள் பெறப்பட்டு பார்வையற்றவர்களுக்கு பொருத்தப்பட்டால் இந்தியா பார்வையற்றவர்களே இல்லாத அழகிய இந்தியாவாக மாறும்.
யார் கண்தானம் செய்யலாம்

செப்டம்பர் 8 ஆம் நாள் தேசிய கண்தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்தானம் செய்ய சில வரம்புகள் உள்ளன. கண்ணில் எந்த குறையும் இல்லாதவர்கள் கண்தானம் செய்யலாம். மேலும் மூக்கு கண்ணாடி அணிந்தவர்களும் கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம். கண்தானம் செய்வதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. கண்தானம் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மதுவால் இறந்தவர்கள், நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.
முடிவுரை
தற்பொழுது கண்தானம் குறித்து விழிப்புணர்வு பரவலாக பரவி வருகிறது. நாமும் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வோம். அழகிய உலகை பார்வையற்றவர்கள் காண வழிவகை செய்வோம். பார்வையற்றவர்கறளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

செவ்வாய், 10 மே, 2016

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!


                மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!

முன்னுரை

 


      கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.

மரம் என்றாலே நன்மை தான்

      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.

புவி வெப்பமடைதலை தடுக்கிறது

       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.

மண் அரிப்பை தடுக்கிறது

     மரங்களின் வேர்கள் மண்ணில் நன்கு பிணைப்புடன் இருப்பதால் மழை காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறது. மேலும் மண் வளத்தை மேம்படுத்துகிறது. மரங்கள் நிழல் தருபவைகளாகவும் உள்ளது. வெயிலில் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான் நிழலின் அருமை தெரியும் என்பர். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை தான். மேலும் மேசைகள் செய்யவும் வீட்டு உபயோக பொருள்கள் செய்யவும் எரிபொருளாகவும் எந்த பகுதியும் பயனற்று போகாமல் மரத்தின் எல்லா பகுதியும் பயனளிப்பவையாக உள்ளது.

காற்றை விலைக்கு வாங்கும் நிலை

        இத்துனை நன்மைகள் நிறைந்த மரங்களை நாம் சாதாரணமாக வெட்டுகிறோம். இந்நிலை நீடித்துக் கொண்டே போனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கும் அவல நிலையை ஏற்படுத்தி விடுவோம். நீரை வீணாக்கியதால் நம் தலைமுறையே நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காற்றிலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

நம் முன்னோர்களின் பெருமை

         நம் தலைமுறை அசோகர் மரம் நட்டார் என்ற வரலாற்றை படித்து பெருமிதம் அடைகிறது. நாளைய தலைமுறை நம் முன்னோர்கள் அதாவது நாம் மரத்தை வெட்டி அவர்களுக்கு புவி வெப்பத்தை விட்டுச் சென்றோம்  என்ற பெயர் நமக்கு வேண்டுமா?? நீங்களே சிந்தியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு வெப்பம் என்னும் தீயை விட்டுச் சென்று அவர்களை அவல நிலையில் ஆழ்த்த வேண்டாம். நாம் என்றும் நம் முன்னோர்களை எண்ணியும் அவர்கள் விட்டுச் சென்ற வளங்களை எண்ணியும் பெருமிதம் அடைகிறோம். அதேபோல நம் சந்ததியினரும் நம்மை எண்ணி பெருமிதம் அடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

முடிவுரை

       அப்துல்கலாம் ஐயா கூட மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல சொற்பொழிவுகளையும் மரக்கன்றுகளையும் அதிக அளவில் நட்டு உள்ளார். பிறர் நடுவதற்கு காரணமாகவும் உள்ளார். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற வாசகம் சட்டமாக்கபட வேண்டும். பிறரைப் போல் நாமும் இல்லாமல் நம்மால் இயன்ற உதவிகளை நம் சந்ததிகளுக்காக செய்வோம். நாம் கற்ற கல்வி கூட நமக்கு பின்னால் வருபவர் அறியாமல் போகலாம். ஆனால் நாம் இறந்த பின் நம் பேர் சொல்லும் ஒன்று நாம் வைக்கும் மரம் மட்டுமே. எனவே அதிக அளவில் மரங்களை நடுவோம்!! புவி வெப்பமடைவதை தடுப்போம்!!