Wednesday, 30 March 2016

மறைந்து போன மகாராஜா                         மறைந்து போன மகாராஜா
மார்சுபியல் சிங்கம்
காடுகளில் நான் தான் ராஜா என்று கர்ஜித்து திரியும் சிங்கங்களை எல்லாம் ஜுஜுபி என்று சொல்ல வைக்கும் ஒரு வலிமையான படைப்புதான் மகாராஜா சிங்கம் என்று அழைக்கப்படும் மாரசுபியல் சிங்கம். ஆஸ்திரேலியாவில் சில ஆயிரம் ஆணடுகளுக்கு முன்பு வரை காட்டை கலக்கிக் கொண்டிருந்த ஒரு உயிரினம். இது பார்ப்பதற்கு சிறுத்தைப் போல் இருக்கும். உடல் முழுவதும் சிறுத்தைப் போன்ற வட்ட வட்ட புள்ளிகளும், புலி போல் வரிகோடுகளும் கலந்து இருக்கும் ஒரு படைப்பு. இது மிகப் பயங்கரமான கொடிய உயிரினம்.
ஆப்பிரிக்க சிங்கமே நடுங்கும்
இன்றைக்கு பிரமாண்டமாக தெரியும் ஆப்பிரிக்க சிங்கத்திற்கும், இதற்கும் சண்டை வந்தால், மாரசுபியல் சிங்கம் கொடுக்கும் ஒரு அடியில் ஆப்பிரிக்க சிங்கம் நிலைகுலைந்து போய்விடும். இந்த சிங்கத்தின் பலத்துக்கு பற்களும் நகங்களும்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். தாடைகளின் இருபுறமும் கூர்மையாக காணப்படும் பற்கள், பெரிய மிருகங்களின் சதையைக் கூட எளிதில் குத்திக் கிழித்துவிடும். இதன் நகங்கள் மிகவும் கூர்மையும், பலமும் வாய்ந்தவை.
எப்படி அழிந்தது
19-ம் நூற்றாண்டில் இந்த சிங்கங்களின் எலும்புகள் ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் கிடைத்தன. ஆனால், 2002-ல் தான் இதன் முழுமையான  எலும்புக்கூடு ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டது. டிம் வில்லிங் என்ற இயற்கை ஆர்வலர் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குகையில் மார்சுபியல் சிங்கங்களின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். மிகவும் பலமும், குரூரமும் கொண்ட இதம இனம் எப்படி அழிந்தது? என்பது வியப்பான ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

Sunday, 27 March 2016

தமிழ்ச்சங்கங்கள்

                                                 தமிழ்ச்சங்கங்கள்


முன்னுரை

மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர், பாண்டிய மன்னர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரையாசிரியர் நக்கீரர் ஆவார்.
தலைச்சங்கம்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இருந்தது.  சங்கம் நிறுவப்பட்ட இடம் கடல் கொண்ட மதுரை என்பர். அதில் தலைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் 549 பேர் என்பர். அவர்கள் உட்பட  4449 புலவர்கள் இதில் இருந்தனர்.
நூல்கள்
 அவர்களால் பாடப்பட்ட நூல்கள் ஏராளம். பரிபாடல், முதுநாரைய, முதுகுருகு, களரியாவிரை என பல நூல்கள் இச்சங்க காலத்தில் எழுதப்பட்டன. இதன் காலம் 4440 என்பர்.
இடைச்சங்கம்

 இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரமாகும். இடைச்சங்கத்தில்  உறுப்பினர்களாக இருந்தவர்கள் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கிரந்தை போன்றோர் என 59 ஆவர். இதன் காலம் 3700 என்பர்.
நூல்கள்
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல் போன்ற நூல்கள் அச்சங்கத்தில் எழுதப்பட்டன.
கடைச்சங்கம்
கடைச்சங்கம் இருந்த இடம் வட மதுரை. இதன் காலம் 9990 ஆகும். இதில் 49 பேர் உறுப்பினராக இருந்தனர். இதன் உறுப்பினர்களில் சிலர் சிறு மேதாவியர், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார், மகனார் நக்கீரனார் போன்றோர்.
நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் இச்சங்கத்தில் எழுதப்பட்ட நூல்களாகும்.

முடிவுரை
 மேற்கூறியவற்றை பார்க்கும் போது 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என்று அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன. அவையிரண்டும் இறையனார் களவியரலின் நக்கீரருரையைப் பின்பற்றுவன ஆகும்.