தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2016

காபி மற்றும் தேநீர்

  காபி மற்றும் தேநீர்

முன்னுரை

     காலை எழுந்ததும் மற்றும் மாலை நேரத்திலும் நம்மில் பலருக்கு காபி அல்லது டீ குடித்தால் தான்  அடுத்த வேலையை செய்ய முடியும்.  அதை குடிக்க சற்று தாமதம் ஆனாலும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.
காரணம்


    காபி அல்லது டீ மனிதனின் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்தால்  நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபி நம் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. அதனால் நாம் சோர்வாக உணரும் போது காபி அல்லது டீயை குடிக்கிறோம். காபியில் காபிஃன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்  தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
காபி அல்லது டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

     
   தினமும் இரண்டு கப் காபி குடித்தால் 14% பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
   
       பார்கின்சன் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய் வராமல் தடுக்கிறது.
     
   காபியில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் பாதிப்படைந்த செல்களை புதிப்பித்து கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
   மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காபிஃன் குறைப்பதால் மன அழுத்தம் குறையும். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு டீ குடிப்பதிலும் இருக்கிறது.
   தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால் அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளையும் குறைக்குமாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

   
    காபி அல்லது டீயை அளவாக குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ குடித்தாலோ அல்லது காபி குடித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் அமிர்தமே நஞ்சாவது போல் இதனாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.
  காபி அதிகமாக குடித்தால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து இரத்தசோகை ஏற்படலாம்.
  காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதய வால்வுகளை விறைப்படையச் செய்து பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.
  சிலர் தலைவலியாக இருந்தால் காபி அல்லது டீயை குடிப்பர். தலைவலிக்கு அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
  
  சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். குறித்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கத் தவறினால் பதற்றம் உண்டாகும். மேலும் எலும்பின் உறுதியை பாதிக்கும். பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் காபி அல்லது டீயை அதிக சூடாக குடிப்பதால் பற்கள் பலம் இழக்கிறது.
   காபி அல்லது டீயுடன் நாம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவிலேயே நமக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைத்து விடும். நாம் காபியில் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
  காபி அல்லது டீயை அதிகமாக குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதை குடிக்கத் தவறினால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடுவது போல் இருக்கும்.
முடிவுரை
எதையும் அளவாக சாப்பிட்டால் நமக்கு நன்மை தரும். நன்மைதானே என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு விசமாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 22 மே, 2016

கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்

          கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்


கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள்
கண்தானம் செய்ய விரும்புவோர் தமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு  கண்தானம் செய்வது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தாம் இறந்தவுடன் கண்களை எடுத்துக் கொள்ளலாம் என முன்கூட்டியே கண் மருத்துவமனையில் பெயரை பதிவு செய்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் பேப்பரை எல்லோரும் அறிந்த இடத்தில் வைக்க வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
கண்தானம் செய்வதில் செய்பவர்களைவிட சுற்றி இருப்பவர்களின் பங்கு அதிகம். கண்தானம் செய்பவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும்.
கண்தானம் செய்பவர் இறந்ததும் உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா எனப்படும் கருவிழிக்குள் ஒளிகற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.
கண்வங்கி
இறந்தவர்களின் கண்களைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்கும் காப்பகத்திற்கு கண்வங்கி என்று பெயர். நாம் அவர்களுக்கு கண்தானம் செய்பவர் இறந்த செய்தியை தெரிவிக்கும் போது கண் சேமிப்புக்கென உள்ள மருத்துவ அதிகாரிகள் உடன் வந்து இறந்தவர் கண்களை முறைப்படி எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பர். அதன் மூலம்  பார்வையற்ற இருவர்க்கு பார்வை கிடைக்கும்.
கண்தானம் செய்தவர் இறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்களை இறந்தவர்களின் உடலிலிருந்து அகற்றிவிடுவர். அப்போது தான் அதை பிறருக்கு பொருத்த முடியும்.
கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்று கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான் கண்விழிகளை பார்வையற்றவர்களுக்கு பொருத்துவர்.
முதலில் இறந்தவரிடம் இருந்து  இரத்தம் சேகரிக்கப்பட்டு உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு மற்றவர்க்கு பொருத்தப்படும்.
யார் கண்தானம் செய்யலாம்
நீரிழிவுநோய், இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால் தொற்றுநோய், மஞ்சள்காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்றவற்றால் இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.